புதன், 22 மே, 2024

என்​னைக் கனவிலாடி ஈ​ரோடு ​போனவ​னை...

 



சித்தரித்தாய் சித்திரமாய் சிறைஎடுத்தாய் என்னுள்அன்பு-

தத்தளிக்க குண்டுமல்லி கொடியிடையில் பூப்பிளக்க

பித்தளித்தாய் தவிக்கவிட்டாய் பேச்சிழக்க நித்தமும்என்னை;

பைத்தியமாய் காதலைநான் பார்ப்பதற்கோ விட்டகன்றான்?


சித்திரையா வைகாசியா மார்கழி புரட்டாசியா?

ஐப்பசியா கார்த்திகையா ஆனிஆடி ஆவணியா?

பங்குனியா தைமாசியா பன்னிரெண்டு மாதங்களில்;

எந்தமாதம் இன்புறஎன் தலித்மாமன் வருவானோ?


கூடுத் துறைகண்டேன்; குடையும் மதுவண்டு-

தேடும் வயல்கண்டேன்; திரண்ட கனிகொடியில்-

ஆடும்இலை கண்டேன்; அரவுப்பாற் கடல்அசைய

ஓடுபடகில் நதிஅழகில் ஊடுசுகம் கனவானதே!


என்னைக் கனவிலாடி ஈரோடு போனவனை

இன்றுநான் காணலையே ஏங்குகிறேன் - செல்நிலவே!

சென்றுஅவனைக் கண்டு திரும்பிவரச் சொல்லேன்

கன்னிஎன் கண்ணுறங்கி டும்!


மதுவழங்கும் பூவுள் மயங்கிடும் வண்டு

எதுகையொடு மோனை இணைய புதுக்கவிதை;

பாடுகிற போது பரவசத்தில் பூவனம்

​​தேடிடுமோ தென்றல் துணை!


பூத்தேடும் வண்டே! புன்னகை யோடுமா ஆடும்

*தீகோடு தாண்டு தேன்பண்டம் கண்டு-உன்

‘பா’க்காடும் மொட்டு மகரந்தத்துள் உருண்டு-என்

நாக்காட தமிழ்பாடும் நாயகனை வரச்சொல்!


தட்சணைமேல் ஆசையோ? தங்கநகை மோகமோ?-உன்

மச்சினிபோல் ஒருத்திவந்து மயக்க ‘மது’ தந்திட்டாளோ?

கத்தரித்தாய்! தினமும்ஏன் ஏங்கவிட்டாய் இராப்பகலாய்?

கத்தரிக்காய் ​​கொஞ்சலுக்கா காத்திருந்தேன் செப்புநெஞ்சே!

 *திருச்​​செங்கோடு


அவனின் நினைவால் அன்றாடம் தீய்ந்தேன்

குவியலை காதல் கொதிகலன் ஆக

துவளிடை காய துயரத்தால் தேய

தவிக்க​​​​​வோஆசைநிலை கள்!

 

ணையுடைந்த வெள்ளமா? அலைஎழுப்பும் ஆழியா?

னைமரத்தில் கசிந்தகள்ளை பருகஊறிடும் போதையா?

பசிஎடுக்க இறைநோக்கி பாய்ந்திடும் வனவேங்கையா?

உருசிகொடுக்க ஒழுகிடும் என்தேன்கூடு காதல்தாபமே!


பண்ணையா? தெற்கு பார்த்து நிமிர்ந்திருக்கும்

புன்னையா? புன்னை சூழ பூத்தழைக்கும்

தென்னையா? செப்பு ஒளிசிதறும் இரவுநிலா-

பெண்ணாய் என்னைஏன் தடவுகிறாய் தென்றலே?

 

மேகம் விலகிட மின்னல் பளிச்சிட

தாகபுவி வெப்பம் தணித்திடும் பூமழையே!

வேகமாய் ஓடுபிரிய மேனி கருத்தவனை…

தேகம் சிவக்கவரச் செய்!

 

பற்றத்தான்காதல்தை பற்றத்தான் மாமன்கை

முற்றத்தான் சேய்ஆசை முத்தமிட இன்புற்று

பற்றத்தன்அன்னைமுலை பத்துமா தத்துள்ளே

தொற்றப் பிறப்பானோ நெஞ்சே! 

 

 ஊறும் கிணறாகி; ஓடிவரும் ஆறாகி;

ஆறும் பாலாகி; அருந்திடும் மோராகி;

ஏறும் எறும்பாகி;  தீயாக நெய்உண்ண

சேரும் நாளெண்ணி முனகிடு தே​மார்பு


பூமி என் கால்களுக்குக் கீழே நகர்கிறது; 
எனவே, 
சந்திரனைப் போல, நான் உலகம் முழுவதும் 
பறக்கின்றேன்! 
வானத்தில் மேகப் படுக்கையில் ஓய்வெடுங்கள்!
  
உன்னால் தான் இப்படி உருள்கின்றது பிரபஞ்சம்! 
சூரியன் தென் திசையில் தொடங்காதே! 
பூமியின் கிழக்கு நிலையில் இருந்து எழுந்தாலும்; 
இதனால் 
எல்லாத் திசைகளும் என்னை நோக்கிப் பார்க்கின்றன; 

ஆனால் என் கண்கள் நீ இருக்கும் மேற்குப் பகுதியையே 
 பார்க்கின்றன! 
 நீங்கள் ஏன் என் அருகில் வரக்கூடாது?  
காதலர் தினத்தில் கூட!
 
வானத்தில் இரவு காதல்நிலா எப்போது சிரிக்குமோ? 
ஒருகோழி தன்சேவலுக் காகஇங்கே காத்திருக்கிறது!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக